காலைத் தியானம் – அக்டோபர் 17, 2020

எஸ்தர் 7: 1 – 4                                 

ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு              

மறுபடியும் மறுபடியும் என்ன வேண்டும் என்று ராஜா எஸ்தரிடம் கேட்கிறார். இதுவே சரியான தருணம் என்று தீர்மானித்த எஸ்தர் இப்போது ராஜா தன் உயிரையும் தன் ஜனமாகிய யூதர்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கிறாள். மேலும் அவள் ராஜாவிடம் சொல்லும் வார்த்தைகளைக் கவனியுங்கள். நாங்கள் அடிமைகளாகும்படி விற்கப்பட்டிருந்தாலும் இதை ராஜாவிடம் கொண்டு வந்திருக்க மாட்டேன். ஆனால் நாங்கள் கொலை செய்யப்படும்படி விற்கப்பட்டுள்ளோம். நாங்கள் இல்லாமற் போனால் அது ராஜாவுக்கும் நஷ்டமாகிவிடுமே! எஸ்தர் அகாஸ்வேரு ராஜாவிடம் பேச சரியான நேரத்தை மாத்திரமல்ல, சரியான வார்த்தைகளையும் தெரிந்து கொள்ளுகிறாள். அவள் பேசிய வார்த்தைகளில் தவறு இருந்திருந்தால்கூட யூதர்கள் எல்லாரும் அழிக்கப்பட்டிருப்பார்கள். எந்த நேரத்தில எந்த வார்த்தைகளைப் பேச வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள ஆண்டவர்தான் நமக்கு ஞானம் தர வேண்டும்.                

ஜெபம்

ஆண்டவரே, எஸ்தரிடம் காணப்பட்ட ஞானத்தை எனக்கும் தாரும். ஆமென்.