காலைத் தியானம் – அக்டோபர் 21, 2020

எஸ்தர் 8: 11 – 17                                      

அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும்         

மொர்தெகாய் ராஜாவின் முத்திரையின் கீழ் எழுதிய மாற்று சட்டத்தை இன்று கவனிப்போம். ஆமான் எழுதிய சட்டத்தின்படி, யூதர்களுக்குத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இல்லை. இப்போது அவ்வுரிமை கொடுக்கப்படுகிறது. அது மாத்திரமல்ல, யூதர்கள் ஒன்றாய் சேர்ந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், எதிரிகளைக் கொன்று அழிக்கவும் அவர்களுக்கு உரிமை கொடுக்கப்படுகிறது. தற்பாதுகாப்புக்காக சண்டை போடும் உரிமையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எதிரிகளின் உடைமைகளைக் கொள்ளையிடும் உரிமை எதற்கு? அநேக யூதர்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்தார்கள். யூதர்களின் உடைமைகள் ஏற்கனவே எதிரிகளால் அபகரிக்கப்பட்டிருந்தன. ஒருவன் மற்றவனை ஒடுக்கி அநியாயமாய் சேர்க்கும் பணமும் செல்வமும் அவனிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படும். ஆகையால்தான் சகேயு இயேசுவை சந்தித்து இரட்சிப்பைப் பெற்றவுடன், யாரிடமிருந்தாவது நான் தகாத முறையில் சம்பாதித்திருந்தால், அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்று சொல்லுகிறான். நீ யாரிடமிருந்தாவது அநியாயமாய் சம்பாதித்ததுண்டா?         

ஜெபம்

ஆண்டவரே, நான் தெரிந்தோ அல்லது தெரியாமலோ யாரிடமிருந்தாவது தகாத முறையில் சம்பாதித்திருந்தால், அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.