காலைத் தியானம் – அக்டோபர் 24, 2020

எஸ்தர் 9: 24 – 32                                            

பூரிம் என்னும் பண்டிகை நாட்கள்        

ஆமான் யூதர்கள் எந்த நாளில் அழிக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்க உபயோகித்ததுதான் பூர் என்னும் சீட்டு முறை (எஸ்தர் 3:7). அதைப் பற்றி வேறே எதுவும் சொல்லப்படவில்லை. யூதர்கள் தங்கள் சரித்திரத்தை மறந்துவிடக் கூடாது என்று விரும்பிய மொர்தெகாய், பூர் என்னும் பெயர் அடிப்படையில் பூரிம் என்னும் பண்டிகையை ஏற்படுத்தினான். பண்டிகையை எப்படி கொண்டாட வேண்டும் என்பது நிர்ணயிக்கப்ப்பட்டது. விருந்துண்டு, பரிசுகளை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்ச்சியாய் கொண்டாடும்போது ஏழைகளை மறந்துவிடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டது. யூதர்களின் பண்டிகைக் கொண்டாட்டங்கள்  எல்லாவற்றிலும் ஏழைகளை மறந்து விடாதே என்னும் போதனைத் திரும்பத் திரும்ப வருகிறதைப் பார்க்கிறோம். கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கும் காரணங்கள் உண்டல்லவா? அந்நாட்கள் உன் வாழ்க்கையிலும் உன் பிள்ளைகள் வாழ்க்கையிலும் அர்த்தமற்ற கொண்டாட்டமாக மாறிவிடாமல் பார்த்துக் கொள். மேலும் குறிப்பாக அந்நாட்களில் ஏழைகளை மறந்துவிடாதே.                                       

ஜெபம்

ஆண்டவரே, பண்டிகை நாட்கள் என் வாழ்க்கையில் அர்த்தமுள்ளவைகளாக இருக்கக் கிருபை தாரும். ஆமென்.