காலைத் தியானம் – நவம்பர் 02, 2020

யோபு 4: 5 – 11                                                    

குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ?        

எலிப்பாஸ் சொல்வதைக் கவனியுங்கள். குற்றமில்லாதவன் ஒருவனும் அழிந்ததில்லையாம். சன்மார்க்கன் அதம்பண்ணப்பட்டதில்லையாம்! அவன் யோபு மீது ஏதோ குற்றம் இருக்கிறது என்றும் ஆகையால்தான் அவன் இத்தனை துன்பங்களையும் அனுபவிக்கிறான் என்றும் குற்றஞ்சாட்டுகிறான்.  நீதிமான்கள் முடிவில் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பதும் துன்மார்க்கர் முடிவில் அழிவைச் சந்திப்பார்கள் என்பதும் உண்மை. ஆனால் தற்காலிகமாக துன்பங்களை அனுபவிக்கும் நீதிமான்களையும், சகல விதமான நன்மைகளை அனுபவிக்கும் துன்மார்கரையும் நம் வாழ்க்கையில் பார்க்கிறோம் அல்லவா? வேதாகமத்தில் பல உதாரணங்கள் உண்டல்லவா? நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவே குற்றமில்லாமல் பாடுகளை அனுபவித்தவர்தானே! ஆகையால் எலிப்பாசின் குற்றச்சாட்டு தவறானது. அதுவும் யோபுவின் காரியத்தில் முற்றிலும் தவறானது. மேலும் அவன் யோபுவை ஆறுதல் படுத்த முயற்சிக்காமல் அவனைக் குற்றப்படுத்துவதில்தான் குறியாயிருந்தான். மொத்தத்தில் எலிப்பாஸ் தவறான நோக்கத்தோடு, தவறான நேரத்தில், தவறான வார்த்தைகளைத் தவறான விதத்தில் பேசினான். ஒருவன் துன்பத்தை அனுபவிக்கும்போது அவனை நியாயந்தீர்க்க முற்படாதே.        

ஜெபம்

ஆண்டவரே, பிறரை நியாயந்தீர்க்கும் தவறான எண்ணங்கள் என்னை அணுகாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.