காலைத் தியானம் – நவம்பர் 05, 2020

யோபு 5: 8 – 16                                                   

எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்       

எலிப்பாசின் வார்த்தைகள் யோபுவுக்கு ஆறுதல் தரவில்லை.  அவன் யோபு அனுபவித்த எல்லா துன்பங்களுக்கும் யோபுவின் பாவமே காரணம் என்று தவறாக முடிவு செய்திருந்தான். இருந்தாலும் எலிப்பாசின் வார்த்தைகளில் நாம் தெரிந்து, உணர்ந்து கொள்ளவேண்டிய பல சத்தியங்களும் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை இன்று பார்ப்போம். நொறுக்கப்படும் சூழ்நிலையில் இருக்கும்போது, இந்த நிலையிலிருந்து நான் எப்படி வெளியேறுவேன், நான் வாழ்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா, என்ற கேள்விகளைக் கேட்பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சத்தியம் ஒன்று தான் இது. தேவன் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்கிறவர்.  உன் வாழ்க்கையில் அவர் மறுபடியும் ஒரு அதிசயத்தைச் செய்ய வல்லவராயிருக்கிறார். ஏற்கனவே கர்த்தர் செய்துள்ள பல அதிசயங்களை நீ அனுபவித்திருக்கிறாய் அல்லவா? நீ நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு உனக்குக் கிடைத்த பெரிய அற்புதங்கள் யாவை? அவைகளை எழுதி வை. செங்கடலைக் கடந்து வந்த இஸ்ரவேலர், சமுத்திரத்தை வெட்டாந்தரையாக்கிய கர்த்தருடைய வல்லமையை மறந்துவிட்டார்கள். நீ பெற்றுள்ள ஆசீர்வாதங்களை அடிக்கடி நினைவுகூரு.               

ஜெபம்

ஆண்டவரே, நான் ஒடுக்கப்படும் நேரத்தில் உம்முடைய வல்லமையை நினைவுகூர எனக்குக் கிருபை தாரும். ஆமென்.