காலைத் தியானம் – நவம்பர் 07, 2020

யோபு 6: 1 – 14                                                 

உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது      

பிரசங்கமாக இருந்தாலும் சரி, ஆலோசனையாயிருந்தாலும் சரி அல்லது சாதாரண உரையாடலாக இருந்தாலும் சரி, ஆத்துமாவைத் தொடாத வார்த்தைகளினால் யாருக்கு என்ன பிரயோஜனம்? யோபுவின் நண்பர்கள் முதலில் நல்ல நோக்கத்தோடுதான் யோபுவைப் பார்க்க சென்றிருக்க வேண்டும். அவர்கள் மவுனமாயிருந்த ஏழு நாட்களும் யோபுவுக்கு மிகவும் ஆறுதலாயிருந்திருக்கும்.  எலிப்பாஸ் பேச ஆரம்பித்தவுடன் அவனுடைய வார்த்தைகள் ஆறுதல் படுத்துவதற்குப் பதிலாக யோபுவைப் புண்படுத்துபவைகளாக அமைந்துவிட்டன.  தூக்குத் தண்டனைப் பெற்ற கைதி ஒருவனிடம் அவனைத் தூக்கிலிடப்போகும் மனிதன், பயப்படாதே, உனக்கு வலி தெரியாது; எல்லாம் ஒரு சில வினாடிகளில் முடிந்துவிடும் என்று சொன்னானாம். அதற்கு அந்த கைதி, வலி தெரியாது என்று உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டானாம். ஏதோ ஆறுதல் சொல்லுகிறோம் என்று நினைத்துக் கொண்டு வார்த்தைகளை அள்ளி வீசக்கூடாது.             

ஜெபம்

ஆண்டவரே, சரியான வார்த்தைகளை மாத்திரம் பேசும் ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.