காலைத் தியானம் – நவம்பர் 13, 2020

யோபு 9: 14 – 35                                               

மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே   

யோபு தன் மனதில் தோன்றிய குழப்பங்களைக் குறித்துத் தொடர்ந்து பேசுகிறான். கர்த்தர் ஒருவேளை, யோபுவே வா பேசலாம்; உன் வழக்கு என்ன என்று கேட்டுவிட்டால் நான் என்ன சொல்ல முடியும்? அப்படியே நான்  என்னை நிரபராதி என்று நிரூபித்துவிட்டால்கூட அதினால் என்ன பயன்? கர்த்தர் தான் சில தருணங்களில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அழிக்கிறாரே! ஒருவேளை நான் இப்படி புலம்பாமல், துக்கத்தை வெளியே காட்டாமல், மகிழ்ச்சியாய் இருக்க முயற்சித்தால் (வசனம் 27), என் நிலையில் ஏதாவது மாற்றம் ஏற்படப்போகிறதா? கர்த்தரோடு நான் கேள்வி கேட்டு பதில் சொல்லிப் பேச அவர் மனிதன் இல்லையே!  அவருக்கும் எனக்கும் நடுவே, இருவரையும் தொடக்கூடிய மத்தியஸ்தர் ஒருவரும் இல்லையே! (வசனம் 33). யோபுவின் புலம்பலின் இந்த கடைசி பகுதிக்குப் பதில் தான் இயேசு கிறிஸ்து. யோபுவுக்குத் தெரிந்திராத ஒரு பதில் நமக்குத் தெரியும் அல்லவா! தேவனை நாம் அறிந்துகொள்ளும்படி தானே இயேசு கிறிஸ்து மனு உருவெடுத்து பூமிக்கு வந்தார்.  “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று இயேசு கிறிஸ்து சொன்னதை, யோவான் 14:9ல் பார்க்கிறோமே! மேலும் 1 தீமோத்தேயு 4, 5ம் வசனங்களில், தேவனுக்கும் மனிதருக்கும் இருக்கும் ஒரே மத்தியஸ்தர் இயேசு கிறிஸ்துவே என்றும் பார்க்கிறோம். 

ஜெபம்

ஆண்டவரே, யோபுவுக்குத் தெரிந்திராத கிருபைகளை எங்களுக்குத் தந்திருப்பதற்காக நன்றி சுவாமி. ஆமென்.