காலைத் தியானம் – நவம்பர் 14, 2020

யோபு 10: 1 – 22                                               

நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன?

யோபு இப்போது கர்த்தரோடு பேசுகிறான். கர்த்தாவே நீர் என்னை உருவாக்கி, இந்த உடலைத் தந்து, உயிரைத் தந்து எனக்குப் பலவித தயவையும் பாராட்டினீர். இருந்தாலும் இப்போது ஒரு காரணத்தையும் எனக்குத் தெரியப்படுத்தாமல் என்னுடைய சொத்து, சுகம், பிள்ளைகள் அனைத்தையும் எடுத்துவிட்டீர். நான் மனதிலும் உடலிலும் அனுபவிக்கும் இந்த வலியைத் தாங்க முடியவில்லை. எனக்கு இந்த பூமியில் இன்னும் அநேக நாட்கள் இருப்பதாகத் தெரியவில்லை. நான் ஏன் பிறந்தேன்? என் வாழ்க்கை வீண் தானே? . . . . இது வீண் தானே என்ற கேள்விதான் இந்த அதிகாரத்தின் மையக் கருத்தாக இருப்பது போல தோன்றுகிறது. ஒரு சிறு குழந்தை அல்லது ஒரு வாலிபன் மரிக்க நேரிட்டால், நாமும் அதே கேள்வியைத் தானே கேட்கிறோம்? இந்த வாழ்க்கை வீணாகிவிட்டதே என்று அங்கலாய்க்கிறோம் அல்லவா? ஒரு பெண் விலையேறப்பெற்ற தைலத்தை இயேசுவின் மீது ஊற்றியபோது, இது வீண் தானே என்று அநேகர் கேட்டார்கள்.  இயேசுவுக்கோ அது ஒரு அருமையான ஆராதனையாய் இருந்தது.  யோபு அனுபவித்த துன்பமும் வேதனையும் அந்த நேரத்தில் கர்த்தருக்குப் பிரியமான ஆராதனையாய் இருந்தது. ஏனென்றால் அதை வைத்துதான் கர்த்தர் சாத்தானின் வாயை அடைத்தார்.

ஜெபம்

ஆண்டவரே, ஏன் என்ற கேள்விக்கு விடை தெரியாத நேரத்திலும் கூட விடாது உம்மைப் பற்றிக்கொள்ள எனக்குக் கிருபை தாரும். ஆமென்.