யோபு 16: 11 – 22
தேவனோடே மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும்
யோபு மறுபடியும் தன்னுடைய ஒடுக்கப்பட்ட நிலையில் யாராவது தனக்காகக் கர்த்தரிடம் பரிந்து பேச மாட்டார்களா என்று ஏங்குகிறான். ஆனால் அவன் அதைச் சொல்லும் விதம் விசித்திரமாக இருக்கிறது. ஒரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனோடே வழக்காடுகிற ஒருவன் யோபுவுக்கு இருந்தால் நலமாயிருக்குமாம். மூன்று மனுபுத்திரர் நண்பர்களாயிருந்தும் அதில் ஒருவன்கூட யோபுவைப் புரிந்துகொள்ளவில்லை. யோபுவுக்கு மாத்திரமல்ல, நம் அனைவருக்கும் தேவை ஒரு நண்பனுக்கும் மேலான, எப்போதும் நாம் நம்பக்கூடிய இயேசு கிறிஸ்துதான். பிதாவாகிய தேவனின் வலது பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு நமக்காகப் பரிந்து பேசுகிறவர் அவரே. அவரே நமக்காக வழக்காடுகிறவர். யோபு இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்த காலத்திற்கு முன்னதாகவே பூமியில் வாழ்ந்தவன். ஆகையால் அவனுக்கு இயேசு கிறிஸ்துவைக் குறித்துத் தெரியவில்லை. நமக்காக வழக்காடுகிறவர் ஒருவர் இருக்கும்போது நாம் எதைக் குறித்தும் கவலைப்படவேண்டியதில்லை.
ஜெபம்
என் ஆண்டவராகிய இயேசுவே, எனக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறதற்காக நன்றி சுவாமி. ஆமென்.