காலைத் தியானம் – நவம்பர் 25, 2020

யோபு 20: 1 – 29                                                 

துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது . . . மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம் மாத்திரம்  

எலிப்பாஸ், பில்தாத், சோப்பார் ஆகிய மூன்று பேரில் சோப்பார் கடைசியில் பேசுவதால் அவன்தான் வயதில் குறைந்தவன் என்று கருதப்படுகிறது. அதை உறுதி செய்வதுபோல அவனது பேச்சிலும் ஒரு முதிர்ச்சி இல்லை. துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதும் மாயக்காரனின் மகிழ்ச்சி ஒரு நிமிடம்தான் நிலைக்கும் என்பதும் கர்த்தர் பூமியில் மனிதனை வைத்த ஆதிகாலமுதல் நிரூபிக்கப்பட்ட ஒன்று என்று சோப்பார் கூறுகின்றான். அவனுக்கு எங்கிருந்து இப்படிப்பட்ட ஒரு தகவல் கிடைத்தது என்பது தெரியவில்லை. கர்த்தர் அக்கிரமக்காரருக்கு 120 ஆண்டு கால அவகாசம் கொடுத்த பின்னரே வெள்ளத்தை அனுப்பினார் (ஆதி 6:3). அவர் கானானியரை நியாயந்தீர்ப்பதற்கு முன் நானூறு ஆண்டுகள் காத்திருந்தார். சோப்பார் சொல்வதைப் போல் இல்லாமல், வேதாகமத்தில் பலர், அக்கிரமக்காரர் நீண்ட ஆயுளுடன் துன்பமில்லாத வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும், நீதிமான்கள் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்றும் அங்கலாய்ப்பதைப் பார்க்கிறோம் (சங் 37; சங்: 73; எரேமியா 12:1-4). இன்று நாம் சில பிரசங்கங்களில் கேட்கும் Prosperity Gospel லும் யோபுவின் நண்பர்களின் போதனையைப் போன்றதுதான்.  

ஜெபம்

ஆண்டவரே, உமது வார்த்தைக்குப் புறம்பான போதனைகள் என்னை ஏமாற்றிவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.