யோபு 26: 1 – 6
திடனில்லாதவனுக்கு நீ எப்படி ஒத்தாசைபண்ணினாய்?
திடனற்றவன், பெலனற்றவன், ஞானமில்லாதவன் ஆகியோரைப் பார்க்கும்போது உன் மனதில் தோன்றும் முதல் எண்ணம் என்ன? இவன் ஏன் இப்படி இருக்கிறான் என்பதுதானே! நமக்குப் பதில் கிடைக்காது என்று தெரிந்திருந்தாலும் நமக்குள் எழும்பும் முதல் கேள்வி அதுதான். அந்த கேள்வியின் பின்னணியில் இருப்பது நம்மைப் பற்றி நாம் கொண்டிருக்கும் “நான் அவனைவிட சிறந்தவன்” என்ற ஒரு தவறான எண்ணம். பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆங்கில ஆராதனையில் பங்குபெற்றேன். அன்று பிரசங்கம் செய்யும்படி அழைக்கப்பட்டிருந்த வேறு சபையைச் சேர்ந்த போதகருக்கு ஆங்கிலத்தில் பேசும் திறமை சற்று குறைவாகவே இருந்தது. அவருடைய பேச்சிலிருந்த பிழைகளைக் கேட்ட சபையார் ஏளனமாக சிரித்ததை சபையின் போதகர் கவனித்தார். அடுத்த வார ஆராதனையில் அவர் சபை மக்களை இவ்வாறாகக் கடிந்துகொண்டார். சிலர் பேசுவதைக் கேட்டு அவர்கள் முன்னிலையிலேயே ஏளனமாய் சிரிக்கிறீர்கள். அவர் தம்மிடம் இருப்பதைக் கர்த்தருக்கென்று உபயோகிக்கிறார். உங்களுக்கு சிறந்த பேச்சுத் திறமை இருந்தால் அதை வைத்துக் கொண்டு கர்த்தருக்கென்று என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். அந்த கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது. திடனற்றவர்கள், பெலனற்றவர்கள், ஞானமில்லாதவர்கள் ஆகியோரைப் பார்க்கும்போது அந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்யலாம் என்று யோசிக்கவேண்டும். நீ எப்படி ஒத்தாசைபண்ணினாய், எப்படி ஆதரித்தாய் என்ற கேள்விகள் உன்னிடமும் கேட்கப்படும்.
ஜெபம்
ஆண்டவரே, திடனற்றவர்களை ஆதரிக்கும் நற்குணத்தை எனக்குத் தாரும். ஆமென்.