காலைத் தியானம் – டிசம்பர் 03, 2020

யோபு 27: 1 – 23

புழுதியைப் போலப் பணத்தைக் குவித்துக் கொண்டாலும்   

இந்த அதிகாரத்தின் பிற்பகுதியில் பொல்லாதவர்கள் சுதந்தரித்துகொள்ளப்போகும் இழப்புகளைப் பற்றி யோபு சொல்லுகிறான். பொல்லாத மனிதர் புழுதியைப் போல பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப் போல ஆடைகளை அடுக்கி வைத்துக்கொண்டாலும் அவையெல்லாம் ஒரு நாள் இல்லாமல் போய்விடும் என்றும் அவன் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை என்றும் சொல்லுகிறான். இப்படிப்பட்ட நிகழ்வுகள் நம் கண்முன் நடப்பதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா? அனுதின உணவு, சுத்தமான உடை, தங்குவதற்கு ஒரு இடம் போன்ற இவைதானே ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை! பின் ஏன் பொல்லாத வழிகளில் சென்று புழுதியைப் போல பணத்தைச் சேர்க்கவேண்டும்? சாத்தான், ஆசைக் காட்டி மோசம் போகப்பண்ணும்படி செய்கிற சூழ்ச்சிக்கு நீ ஆளாகிவிடாதே.  மேலும் இந்த அதிகாரத்தின் முற்பகுதியில் யோபு, கர்த்தர் பெயரில் ஆணையிட்டு நான் ஒருபோதும் உத்தமத்தை விட்டு விலக மாட்டேன் என்று சொல்லுகிறான்.  யோபு, எந்தவித பாவமும் செய்யமாட்டேன் என்று தீவிரமாய் முடிவு செய்துகொண்டது மிகவும் சிறந்த காரியம்தான். ஆனால் அவன் அப்படி ஆணையிடும்போது, கர்த்தர் தனக்கு நியாயம் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினான் (வசனம் 4). நம்முடைய உணர்வுகளைக் கர்த்தரிடம் கொட்டுவதில் தவறில்லை. ஆனால் நம்முடைய வார்த்தைகள் தேவதூஷணமாகிவிடாதபடி நாம் கவனமாயிருக்கவேண்டும்.

ஜெபம்

ஆண்டவரே, நான் கடினமான பாதைகளைக் கடந்துசெல்ல நேரிட்டாலும் என் வாயின் வார்த்தைகளைக் காத்துக் கொள்ளும். ஆமென்.