காலைத் தியானம் – டிசம்பர் 07, 2020

யோபு 31: 1 – 40

ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டது உண்டானால்   

இந்த அதிகாரத்தில் யோபு கர்த்தரிடம் ஒரு சத்தியப் பிரமாணம் செய்கிறான். என் கண்களோடு நான் ஒரு உடன்படிக்கைப் பண்ணி அவைகள் எனக்கு இடறலாயிராதபடி காத்துக் கொண்டேன். என் எண்ணங்களினால் நான் ஒரு பாவமும் செய்யவில்லை. என் விசுவாசத்தில் கூட என் தேவனுக்குப் பதிலாக பொன்னையும், என் செல்வத்தையும் நம்பியிருந்தால், நான் தேவனை மறுதலித்தவனாகியிருப்பேன். என் வாயினால் பாவஞ்செய்ய நான் இடங்கொடுக்கவில்லை.  நான் செய்யக்கூடிய நற்காரியங்களைச் செய்யாமலிருந்ததில்லை. என் செயலாலும் நான் பாவம் செய்யவில்லை. யோபுவைப் போல நாம் இப்படி கர்த்தரைப் பார்த்து சொல்ல முடியுமா? மேலும் யோபு, இவற்றில் ஏதாவது குறையோ அல்லது குற்றமோ இருந்தால், தான் தேவனுடைய தண்டனைக்குப் பாத்திரன் என்றும் சொல்லுகிறான்.                                  

ஜெபம்

ஆண்டவரே, யோபுவைப் போல மாசற்ற வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.