யோபு 33: 1 – 11
நான் மீறுதல் இல்லாத சுத்தன்
எலிகூ யோபுவின் மீது இரண்டு குற்றச்சாட்டுகளை வைக்கிறான். முதலாவது குற்றச்சாட்டு, யோபு தன்னை மீறுதல் இல்லாத சுத்தன், குற்றமற்றவன், அக்கிரமம் செய்யாதவன் என்று சொன்னதாக எலிகூ சொல்லுகிறான். அதாவது யோபு தன்னைப் பாவமே செய்யாதவன் என்று சொன்னதாகக் குற்றம்சாட்டுகிறான். இது தவறு. யோபு தன்னைப் பாவமே செய்யாதவன் என்று சொல்லவில்லை. உத்தமனாய் வாழ்ந்தவன் (blameless) என்றுதான் சொன்னான். இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. கர்த்தரே யோபுவை உத்தமன், சன்மார்க்கன் என்றுதானே சொன்னார். இவ்வுலகில் மனிதனாய் உருவெடுத்த இயேசு கிறிஸ்துவைத் தவிர, மனிதருக்குள் பாவம் செய்யாதவர் ஒருவருமில்லை. கர்த்தர் என்னைச் சத்துருவைப் போல நடத்துகிறார் என்று யோபு சொன்னது தான் எலிகூ வைத்த இரண்டாவது குற்றச்சாட்டு. இது உண்மைதான். யோபு கர்த்தரோடு வழக்காடினான். கர்த்தர் கொடுத்த துன்பங்களுக்குத் தான் பாத்திரனல்ல என்று வாதாடினான். கர்த்தர் தனக்கு நியாயம் செய்யவில்லை என்று நினைத்தான். கர்த்தரிடம் தன் வழக்கை எடுத்துச் சொல்ல ஒரு மத்தியஸ்தர் இருந்தால் நலமாயிருக்கும் என்று சொன்னான்.
ஜெபம்
ஆண்டவரே, நீர் நியாயம் செய்யாதவர் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் வந்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.