காலைத் தியானம் – டிசம்பர் 10, 2020

யோபு 33: 12 – 24    

அவன் ஆத்துமாவைப் படுகுழிக்குத் தப்புவிக்கிறார்  

இதுவரை பேசி வந்த யோபுவின் மூன்று நண்பர்களும், யோபு அனுபவித்து வந்த அனைத்து துன்பங்களுக்கும் அவன் செய்துவிட்ட பாவம் தான் காரணம் என்று சொல்லிவந்தார்கள். எலிகூ ஒரு புதிய கருத்தை யோபுவின் முன் வைக்கிறான். கர்த்தர் யோபு பாவம் செய்துவிடாதபடி அவனைத் தடுக்கவும் அவனுடைய ஆத்துமாவை அழிவிலிருந்து காக்கவும் சகலவித இழப்புகளையும் வியாதியையும் கொடுத்தார் என்று சொல்லுகிறான். நாம் அனுபவிக்கும் எல்லா துன்பங்களும் நம்முடைய பாவத்தின் பலன் என்று சொல்லிவிடமுடியாது. பாவத்தின் நேரடி பலனாக நாம் துன்பங்களை அனுபவிக்கும் தருணங்கள் உண்டு. நம்முடைய புத்தியீனத்தால் துன்பத்தை அனுபவிக்கும் தருணங்களும் உண்டு. உதாரணமாக, குடி போதையில் வாகனத்தை ஓட்டி விபத்துக்குள்ளாக்குகிற ஒருவனுடைய செயலால் பலர் துன்பத்துக்குள்ளாகிறதை நாம் பார்கிறோம் அல்லவா? கர்த்தர் துன்பங்களை நம் வாழ்க்கையில் அனுமதித்து நம்மைப் பெரிய பாவத்திலிருந்து தப்புவிக்கும் தருணங்களும் உண்டு. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும் (மத்தேயு 6:13) என்று ஜெபிக்கிறோம் அல்லவா!                         

ஜெபம்

ஆண்டவரே, துன்பத்தை அனுமதித்து என்னைப் படுகுழியிலிருந்து காப்பாற்றிய தருணங்களுக்காக நன்றி சுவாமி. ஆமென்.