காலைத் தியானம் – டிசம்பர் 11, 2020

யோபு 33: 25 – 33    

நான் பேசப் போகிறேன், நீர் மவுனமாயிரும், மறுஉத்தரவு கொடும் . . . மவுனமாயிரும்  

எலிகூ எங்கிருந்து வந்தான் என்பது சொல்லப்படவில்லை. சில வேத அறிஞர்கள் அவன் ஒரு வழிப் போக்கனாக இருந்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். அவன் பேச ஆரம்பித்தவுடன் மடைத்திறந்த வெள்ளம் போல அவனுக்குள் இருந்த எண்ணங்களெல்லாம் பொங்கி வருகின்றன. அவன் பேச்சுத் திறன் பெற்ற ஒரு இளைஞன் என்பது யோபு 32 முதல் 37 அதிகாரங்கள் வரையுள்ள வசனங்களின் மூலமாக நாம் தெரிந்துகொள்கிறோம்.  ஆனால் வெறும் பேச்சுத்திறனை மாத்திரம் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. யோபுவை மறுஉத்தரவு கொடுக்க அனுமதிக்கவேண்டும் என்று எலிகூவின் உள்மனது சொல்லுகிறது. ஆனால் சூழ்நிலையைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த அவனுடைய மனது அதற்கு இடம் கொடுக்கவில்லை. இடைவெளி கொடுக்காமல் பேசிக் கொண்டே போகிறான். மற்றவர்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் கேட்காமல், எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தோடு பேசிக்கொண்டே போவது நன்மைகளைத் தராது. நீ வேலை செய்யுமிடத்தில் பிறருடைய கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்கு முதலிடம் கொடுக்கிறாயா?                        

ஜெபம்

ஆண்டவரே, நான் என்னுடைய சத்தத்தைக் கேட்பதிலேயே பிரியப்படுகிறவனா(ளா)க இருக்காமல், பிறருடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அறிந்து செயல்படுவதில் பிரியமாய் இருக்க உதவி செய்யும்.  ஆமென்.