காலைத் தியானம் – டிசம்பர் 12, 2020

யோவான் 8: 42 – 59 

அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் . . . என்றார்    

இன்று முதல், இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி தியானிப்போம். கிறிஸ்தவ மதம் 2000 வருடங்களுக்கு முன் தோன்றிய ஒரு மதம் என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதில் ஓரளவு உண்மையிருக்கிறது. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பதாகத்தான் அந்தியோகியா என்னும் பட்டணத்தில் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்று முதல் முதல் அழைக்கப்பட்டார்கள் என்று அப்போஸ்தலர் 11:26ல் பார்க்கிறோம். நான்காம் நூற்றாண்டில் கான்ஸ்டான்டைன் என்னும் அரசனின் காலத்தில் ரோமாபுரியில் தான் கிறிஸ்தவம் என்கிற “மதம்” தோன்றியது. ஆனால் இயேசு கிறிஸ்து 2000 வருடங்களுக்கு முன் தோன்றியவர் அல்ல. ஆரம்பமும் முடிவுமில்லாத திரியேக தேவனில் ஒருவரான அவர், 2000 வருடங்களுக்கு முன் மனித உருவெடுத்தார். (உருவாக்கப்படவில்லை.) அதையே கிறிஸ்துமஸ் என்று கொண்டாடுகிறோம். ஆதாமும் ஏவாளும் தொழுது, ஆராதித்து, உறவாடிய அதே கர்த்தரைத் தான் இன்றும் நாம் வழிபடுகிறோம். இந்த பண்டிகை நாட்களில் இதை அறியாத ஒரு சிலருக்காவது இதை விளக்கிச் சொல்லுங்கள்.                      

ஜெபம்

ஆண்டவரே, உம்மைச் சரியாகத் தெரிந்துகொள்ளாதவர்களுக்கு நீர் யார் என்பதை இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் விளக்கிச் சொல்ல எனக்கு ஞானத்தைத் தாரும். ஆமென்.