காலைத் தியானம் – டிசம்பர் 16, 2020

சங் 40: 1- 10    

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்   

நாமும் கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். பொறுமை என்பது எளிதான காரியமல்ல. பொறுமையாகக் காத்திருப்பதை நமக்குச் சொல்லிக் கொடுக்க, கர்த்தர் பலவிதமான பயிற்சி முறைகளைக் கையாளுகிறார்.  சிமியோன் என்பவன் எப்படி இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகைக்குக் காத்திருந்தான் என்பதை லூக்கா 2: 25-35 வரையுள்ள வேதபகுதியில் வாசிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்தும் வேதத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் சொன்ன ஆண்டவர் இன்னும் வரவில்லையே என்று சோர்வடைய வேண்டாம். நாம் நித்தியத்தின் விளிம்பில் வாழ்கிறோம் (We are living at the edge of eternity) என்று ஒரு பக்தன் சொல்லுகிறார். கர்த்தருக்கு ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாளைப் போலிருக்கிறது என்று 2 பேதுரு 3:8ல் பார்க்கிறோம். ஆகையால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களும் நித்தியத்தின் விளிம்பில்தான் வாழ்ந்தார்கள். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்று சொன்னது அன்றும் சரியாகத்தான் இருந்தது. இன்றும் சரியாகத்தான் இருக்கிறது.              

ஜெபம்

ஆண்டவரே, உமது இரண்டாம் வருகைக்காக பொறுமையுடன் காத்திருக்க உதவி செய்யும். ஆமென்.