காலைத் தியானம் – டிசம்பர் 17, 2020

மாற்கு 1: 1 – 11   

அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல   

ஆண்டவருடைய வல்லமை நம் அறிவுக்கு எட்டாதது. அவர் ஆரம்பமும் முடிவும் இல்லாதவர். உலகம் அனைத்தையும் தமது வாயிலிருந்து வந்த வார்த்தையினால் உருவாக்கியவர். அவருக்குப் பெரிய தீவுகள்கூட ஒரு சிறிய அணுவைப் போன்றது தான். மனிதன் கூட அவருக்குத் தராசில் படியும் தூசியைப் போன்றவன் தான் (ஏசாயா 40:15). அப்படிப்பட்ட அற்பமான என்னையும் அவர் தமது உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார். என் தலையில் எத்தனை முடிகள் உண்டு என்பதுகூட அவருக்குத் தெரியும் என்று வேதாகமம் சொல்லுகிறது. இவனைவிட பெரியவன் உலகில் தோன்றவில்லை என்று இயேசுவால் வர்ணிக்கப்பட்டவன்  (மத் 11:11) யோவான் ஸ்நானன். அவன் இயேசு பூமியில் மனிதனாய் உருவெடுப்பதற்கு முன்னதாக அவருக்கு வழியை ஆயத்தப்படுத்தும்படி, முன்னோடியாக வந்தவன். அவனே ஆண்டவருடைய காலணியைத் தொடக்கூட தான் தகுதியற்றவன் என்று சொல்லுகிறான். அப்படியானால் நம்முடைய நிலை என்ன? அற்பமான நம்மோடும் ஆண்டவர் உறவாட விரும்புகிறார். இதைவிட மேலான பாக்கியம் நமக்கு உண்டோ?           

ஜெபம்

ஆண்டவரே, அற்பமான என்னோடும் அனுதினம் பேசுகிறதற்காக நன்றி சுவாமி. ஆமென்.