காலைத் தியானம் – டிசம்பர் 18, 2020

மாற்கு 1: 12- 20   

இயேசு . . .  சுவிசேஷத்தைப் பிரசங்கித்து  

சுவிசேஷம் அல்லது நற்செய்தி என்றால் என்ன? தேவனுடைய ராஜியம் அல்லது பரலோக ராஜியம் வெகு அருகிலிருக்கிறது என்பதுதான் நற்செய்தி. புல்லைப் போன்று தோன்றி முடியும் இவ்வுலக வாழ்க்கைக்குப் பின் ஒரு பரலோக வாழ்க்கை உண்டு என்பதுதான் நற்செய்தி. துன்பங்கள் நிறைந்த இவ்வாழ்க்கைக்கு அப்பால் நித்திய ஆனந்தம் நிறைந்த முடிவில்லாத வாழ்க்கை ஒன்று இருக்கிறது என்பதுதான் நற்செய்தி. அந்த நித்திய வாழ்வை இயேசு கிறிஸ்து நமக்காக சம்பாதித்து வைத்துவிட்டார் என்பதுதான் நற்செய்தி. நாம் செய்யவேண்டியதெல்லாம், நம்முடைய பாவ நிலையிலிருந்து மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் உறவை ஏற்றுக் கொள்வதுதான். நற்செய்திப் பெருவிழா என்ற பெயரில் அற்புதங்களையும் அடையாளங்களையும் காட்டிவிட்டு, மனந்திரும்புதலைக் குறித்து சொல்லாவிட்டால், சொல்லவேண்டிய நற்செய்தியை சொல்லவில்லை என்றுதானே அர்த்தம்!         

ஜெபம்

ஆண்டவரே, நான் உம்மைக் குறித்துப் பேசும்போது, நற்செய்தியை விட்டு என் கவனம் திசை திருப்பப்படாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.