காலைத் தியானம் – டிசம்பர் 19, 2020

மத் 4: 23- 25   

இயேசு உபதேசித்து, பிரசங்கித்து, சொஸ்தமாக்கினார்  

Jesus was teaching, preaching and healing.  உபதேசம் என்பது மனது அல்லது அறிவு சம்பந்தப்பட்டது. பிரசங்கம் ஆவிக்குரிய வாழ்க்கை சம்பந்தப்பட்டது. பிணியாளிகளைக் குணமாக்கியது சரீரம் சம்பந்தப்பட்டது. ஆண்டவருடைய திருச்சபையின் அங்கத்தினரான நம் ஒவ்வொருவருக்கும் மற்றவர்களின் மனது, ஆத்துமா, மற்றும் சரீரத்தின் தேவைகளுக்காக செயல்பட வேண்டிய பொறுப்பு உண்டு. இயேசுவின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொண்டு அவருடைய பிறப்பின் பண்டிகையை ஆர்ப்பரிப்புடன் கொண்டாடும் நாம் அவர் வாழ்ந்துகாட்டியது போல வாழ வேண்டாமா? பிறரின் தேவைகளைச் சந்திக்கும்படி நீ என்ன செய்கிறாய் என்பதை ஆராய்ந்துபார். சில வருடங்களுக்கு முன் 35 ஆதரவற்ற பிள்ளைகளை எடுத்து தம் சொந்த பிள்ளைகளாக வளர்த்துவந்த ஒரு கிறிஸ்தவ தம்பதியரின் வீட்டிற்குப் போயிருந்தேன். அவர்கள், ஒவ்வொரு மாதமும் 90 சதவிகிதத் தேவைகளைக் கிறிஸ்தவரல்லாத பிறமதத்தினரே கொடுத்து வருவதாகச் சொன்னார்கள். ஆண்டவர் அந்த வீட்டின் தேவைகளைக் கொடுத்துவரும் விதத்தை நான் கேள்வி கேட்கவில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்காமலும் இருக்கமுடியவில்லை.       

ஜெபம்

ஆண்டவரே, மற்ற மனிதரின் சரீரம், மனது, மற்றும் ஆத்துமாவின் தேவைகளுக்காக உழைக்க எனக்குக் கற்று தாரும். ஆமென்.