காலைத் தியானம் – டிசம்பர் 24, 2020

மத் 1: 1 – 17  

அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்   

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மனிதனின் கற்பனையில் தோன்றிய கதை அல்ல. அது சரித்திரத்தில் நடந்த உண்மை. பரிசுத்த வேதாகமத்தைத் தவிர பல வரலாற்றுப் புத்தகங்களிலும் இயேசுவின் பிறப்பும் பூலோக வாழ்க்கையும் இடம் பெற்றிருக்கின்றன. வரலாறே, கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின் என்று பிரிக்கப்பட்டு அவர் பூமியில் மனிதனாய் உருவெடுத்த காலகட்டத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் இன்று வாசித்த வசனங்கள் இயேசு, தாவீதின் வம்சத்தில் தோன்றுவார் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன் தீர்க்கதரிசிகள் சொன்னது நிறைவேறியதைக் காட்டுகின்றன. அவர் மனித முயற்சியினால் பிறந்த மனிதன் அல்ல என்பதையும் 16ம் வசனம் சுட்டிக்காட்டுகிறது. அதில் யோசேப்பு இயேசுவைப் பெற்றான் என்று சொல்லவில்லை. மரியாளிடத்தில் இயேசு பிறந்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு கன்னி மரியாளிடம், பரிசுத்த ஆவியானவரால் உருவாக்கப்பட்டு பிறந்தவர் என்பதற்கு இந்த வசனமும் துணைநிற்கிறது. இயேசு கிறிஸ்துவை வெறும் சரித்திர கதாநாயகனாகத்தான் உனக்குத் தெரியுமா அல்லது அவர் நீ பேசி, உறவாடி, வணங்கும் உன்னுடைய ஆண்டவரா?     

ஜெபம்

ஆண்டவரே, நான் பேசி உறவாடும் இரட்சகராக நீர் எனக்கு இருப்பதால் உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.