காலைத் தியானம் – டிசம்பர் 25, 2020

மத் 1: 18- 25  

அவருக்கு இயேசு என்று பேரிட்டான்      

நம் குடும்பங்களில் ஒரு குழந்தைப் பிறக்கப் போகிறதென்றால், பல மாதங்களுக்கு முன்னதாகவே ஆணென்றால் இந்தப் பெயர், பெண்ணென்றால் அந்தப் பெயர் என்று திட்டமிட ஆரம்பித்துவிடுகிறோம். அப்படி திட்டமிட்டு கொடுக்கப்படும் பெயர் ஒருவனின் தனித்துவத்தையும் குணாதிசயங்களையும் அவன் வாழ்நாள் முழுவதும் – பல தருணங்களில் மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் வரை – நினைவூட்டுவதாக அமைகிறது. பிதாவாகிய தேவனால் தீர்மானிக்கப்பட்ட “இயேசு” என்ற பெயர், எல்லா பெயர்களுக்கும் மேலான பெயர் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. அந்த பெயருக்கு வானோர், பூமியிலுள்ளோர், பூமியின் கீழ் உள்ளோர் அனைவருடைய முழங்கால்களும் முடங்கும் என்றும் பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது (பிலிப்பியர் 2:9-11). மேலும் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்ற குணாதிசயங்களையும் இயேசு என்ற பெயர் நமக்கு நினைவூட்டுகிறது. இயேசு என்ற பெயர், நாம் அழைக்கும்படி 2000 ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்டதே தவிர, இயேசு 2000 வருடங்களுக்கு முன் உருவானவர் அல்ல என்பதை மறுபடியும் உணர்ந்து கொள்வோமாக. அவர் தொடக்கமும் முடிவும் இல்லாத கர்த்தர். உலகமே அவர் மூலமாகத்தான் படைக்கப்பட்டது என்று வேதாகமத்தில் பார்க்கிறோம். இந்த இயேசுவை உனக்குத் தெரியுமா?                          

ஜெபம்

ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் உம்மை இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள நீர் கொடுக்கும் தருணங்களுக்காக நன்றி சுவாமி. ஆமென்.