1 தீமோ 6: 1 – 14
நீயோ . . நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் . . . நாடு
இந்த புது வருடத்தில் பணம் சம்பாதிப்பதற்கு நாம் செலவிடும் நேரத்தைவிட அதிக நேரத்தை நீதி, தேவபக்தி, விசுவாசம், அன்பு, பொறுமை, சாந்தகுணம் ஆகியவைகளை சம்பாதிப்பதற்கு உபயோகிப்போமாக. உலகம் அதிகப் பணம் இருப்பவர்களை அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணுகிறது. இன்று ஆலயங்களில்கூட பணக்காரன் தான் பெரிய ஆள், பெரிய இடத்துக் குடும்பம் என்று வர்ணிக்கப்படுகிறான். இது ஆண்டவருடைய அளவுகோல் அல்ல. இந்த வருடத்தில், நீ உன் தேவபக்தியை எப்படி வளர்க்கப் போகிறாய்? பக்தி வளருவதற்கு, வேதாகமத்தை வாசித்து தியானிப்பதுடன், உன் ஆத்தும வளர்ச்சிக்கேற்ற நல்ல புத்தகங்களையும் சேர்த்து வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். நல்ல போதகர்களின் பிரசங்கங்களைக் கேளுங்கள். ஆண்டவரோடு பேசுவதில் அதிக நேரத்தைச் செலவிடுங்கள். பணத்தின் மீது மோகம் கொள்ளாமல் பரலோகத்தில் பொக்கிஷத்தைச் சேர்த்து வையுங்கள். இந்த வருடம் முழுவதும் கர்த்தர் நம்மைப் பரலோக பொக்கிஷ நிறைவால் ஆசீர்வதிப்பாராக.
ஜெபம்
ஆண்டவரே, இந்த வருடம் நான் நீதியிலும், தேவ பக்தியிலும், விசுவாசத்திலும், அன்பிலும், பொறுமையிலும், சாந்தகுணத்திலும் அதிகமாய் வளர எனக்கு உதவி செய்யும். ஆமென்.