காலைத் தியானம் – ஜனவரி 11, 2021

லூக் 14: 12 – 14               

நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும்              

பிரதிபலன் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்று 7ம் தேதி காலைத் தியானத்தில் பார்த்தோம். இன்று வாசித்த பகுதியிலும் ஏழைகள், ஊனர்கள், சப்பாணிகள் போன்றோரை விருந்துக்கு அழைக்கவேண்டும் என்றும், அவர்களால் பதிலுக்கு உன்னை விருந்துக்கு அழைக்க இயலாது என்பதையும் வாசிக்கிறோம். ஆனால் உயிர்த்தெழுதலின் நாளிலே நமக்கு நம் செயலுக்கேற்ற சன்மானம் கிடைக்கும் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. அப்படியென்றால் பரலோகத்தின் பிரதிபலனை எதிர்பார்த்து செயல்படுவது சரியா? முதலாவதாக நமக்குக் கிடைக்கும் பெரிய சன்மானம், welldone என்ற பாராட்டுதலை நம் பரம தகப்பனிடமிருந்து பெறுவதே.  இது பிள்ளைகள், பெற்றோரின் பாராட்டுதலைப் பெறுவதைப் போன்றது.  இரண்டாவதாக இந்த சன்மானம் ஆண்டவர் நமது உள்ளத்தைப் பார்த்து, உள்ளத்தின் நோக்கங்களைப் பார்த்து கொடுக்கப்போகும் சன்மானம். ஆகையால் இதைப் ”பிரதிபலன்” என்று சொல்லமுடியாது.  நாம் நம் பரம தகப்பனுக்குப் பிடித்தவிதமாக, அவரைப் பிரியப்படும்படி செயல்படுவது முற்றிலும் சரியே.        

ஜெபம்

ஆண்டவரே, நான் பண்டிகைகளையும், மற்ற முக்கிய நாட்களையும்  பதிலுக்குப் பதில் செய்யமுடியாதவர்களுடன் கொண்டாட உதவி செய்யும்.  ஆமென்.