காலைத் தியானம் – ஜனவரி 13, 2021

வெளி 21: 1 – 8                    

ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்             

விசுவாசிக்குக் காத்திருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையைக் குறித்து இன்று வாசித்தோம். இது உண்மையென்று தெரிந்தும், கிறிஸ்தவர்களில் அநேகர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்வதை நினைத்தாலே பயந்து நடுங்குவது ஏன்? அவர்களுடைய பணமும் பொக்கிஷமும் இருதயமும் பூமியில் உறுதியாக வேரூன்றி இருப்பதால்தானோ? புத்துயிர் ஊழியத்தை ஆரம்பித்து அதை அநேக ஆண்டுகள் நடத்திவந்த என் தாத்தா தன்னுடைய 92வது வயதில் இவ்வுலகைவிட்டுக் கடந்து, ஆண்டவரோடு வாசம் செய்யும்படி சென்றார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே, குறைந்தது 25 வருடங்களாவது  அவர்கள் அடிக்கடி தன் மரணத்தைக் குறித்துப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். மரணத்தைக் குறித்துப் பேசுவதை நாம் யாரும் விரும்புவதில்லை. நானும் தாத்தாவிடம், ஏன் மரணத்தைக் குறித்து இப்பொழுது பேசுகிறீர்கள், ஆண்டவர் உங்களுக்கு நல்ல உடல்நலனைக் கொடுத்திருக்கிறாரே என்று கேட்பேன். அதற்கு அவர்கள், இவ்வுலகக் காரியங்கள் மீது எனக்கு இப்போது எந்த விதமான பிரியமோ அல்லது ஈர்ப்போ இல்லை என்று சொல்லுவார்கள். உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று இங்கு இத்தனைபேர் இருக்கிறோமே என்று சொன்னால், அங்கும் எனக்கு அருமையானவர்கள் அநேகர் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். நிச்சயமாக அவர்களுடைய இருதயமும், பொக்கிஷமும் பரலோகத்தில்தான் இருந்தது.        

ஜெபம்

ஆண்டவரே, பரலோகத்தைக் குறித்த ஏக்கத்தை எனக்கும் தாரும். ஆமென்.