காலைத் தியானம் – ஜனவரி 16, 2021

மல்கியா 3: 1 – 10                       

தசம பாகங்களையெல்லாம் . . .  கொண்டு வாருங்கள்             

லேவியராகமம் 27ம் அதிகாரம் 30ம் வசனத்திலும் தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது என்று சொல்லப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில், வருமானத்தில் தசமபாகம் கர்த்தருக்கென்று கொடுக்கப்படவேண்டும் என்று பல இடங்களில் சொல்லப்பட்டிருந்த போதிலும், புதிய ஏற்பாட்டில் தசமபாகம் கொடுக்கவேண்டுமென்று குறிப்பாக சொல்லப்படவில்லை. ஆகையால் தசம்பாகத்திற்கு, அதாவது பத்து சதவிகிதத்திற்குக் குறைவாகக் காணிக்கை கொடுத்தால் போதும் என்று அர்த்தமில்லை. இயேசு கிறிஸ்துவும் புதிய ஏற்பாட்டு புத்தகங்களை எழுதிய அநேகரும், உள்ளத்தைக் கர்த்தருக்குக் கொடுக்காமல் வெறும் பணத்தை மாத்திரம் காணிக்கையாகக் கொடுப்பது பிரயோஜனமற்றது என்பதை வலியுறுத்தினார்கள். நம் உள்ளத்தை இயேசுவுக்குக் கொடுத்துவிட்டால், பத்து சதவிகித காணிக்கையோடு நிறுத்திவிடமுடியாது என்னும் உண்மையைத்தான் புதிய ஏற்பாட்டில் பார்க்கிறோம். லூக்கா 21:1-4 வசனங்களில் இயேசு ஒரு ஏழை விதவையின் காணிக்கையைப் புகழ்ந்து பேசியதற்குக் காரணம் அவள் தசமபாகத்தைக் கொடுத்துவிட்டாள் என்பதற்காகவோ அல்லது அதிகப்பணம் கொடுத்துவிட்டாள் என்பதற்காகவோ அல்ல. அவள் நூறு சதவிகிதம் காணிக்கையாகக் கொடுத்துவிட்டாள் என்பதற்காகவே அவளைப் புகழ்ந்தார். இதுவரை காணிக்கைக் கொடுப்பதில் ஒரு ஒழுங்குமுறையைக் கைக்கொள்ளவில்லையென்றால், நீ பத்து சதவிகிதம் கொடுப்பதிலாவது ஆரம்பிக்கலாம்.       

ஜெபம்

ஆண்டவரே, அந்த ஏழை விதவைக்கு இருந்த விசுவாசத்தையும் அன்பையும் எனக்கும் தாரும். ஆமென்.