காலைத் தியானம் – ஜனவரி 22, 2021

லூக் 19: 1 – 10                                   

என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன்             

இயேசு சகேயுவிடம் அவனுடைய பணத்தைப் பற்றியோ அல்லது ஆஸ்தியைக் குறித்தோ ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் சகேயு, இயேசுவின் போதனைகளை அறிந்திருந்தான். ஆங்கில மொழிபெயர்ப்பில் “இப்பொழுதே” என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன் என்று சகேயு சொன்னதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதை உடனேயே செய்யவேண்டும். ஆண்டவருக்குத் தாமதித்து கீழ்ப்படிவது, கீழ்ப்படியாமைக்குச் சமம். நான் தசம பாகத்தைத் தனியாக எடுத்துவைத்து, சேர்த்து, அதை நல்ல வட்டி கிடைக்கும் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து, மொத்தமாக ஒரு நல்ல ஊழிய தேவைக்காகக் கொடுப்பேன் என்று சொல்லுகிறவர்கள் சிலர் உண்டு. ஒருவேளை இன்று நீ மரித்தால், ஆண்டவருக்குக் கொடுக்கக் கிடைத்த தருணத்தை இழந்துவிடுவாய். ஒருவேளை நீ முதலீடு செய்கிற இடத்தில் அந்த பணத்தை இழந்துவிட்டால் நீ என்ன செய்வாய்? நீ கொடுப்பதின் மூலமாக இன்று பெறவேண்டிய ஆசீர்வாதத்தை ஏன் தள்ளிப் போடுகிறாய்?  

ஜெபம்

ஆண்டவரே, என் கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டிய ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.