காலைத் தியானம் – ஜனவரி 31, 2021

மத் 6: 1 – 14                                                

உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது                       

நாம் கொடுப்பது மற்றவர்களுடைய பார்வைக்காக அல்ல. நம் பெருமைக்காகவும் அல்ல. நீ காணிக்கைக் கொடுப்பதும் ஏழைகளுக்கு உதவி செய்வதும் உன் ஆண்டவருக்குத் தெரியும். நீ செய்வதை விளம்பரப் படுத்தாதே. ஆலயச் சுவர்களிலும், கட்டிடங்களிலும், பொருட்களிலும் உன் பெயரைப் பதிப்பது கர்த்தருக்கு மகிமையைக் கொண்டு வருவதில்லை. ஆலயத்தில் உபயோகிக்கும் நாற்காலிகளிலும் மேஜைகளிலும் கூட பணம் கொடுத்தவர்களின் பெயர்களைப் போடுவது இன்று வழக்கமாகிவிட்டது. அநேக ஆலயங்களில் அறுப்பின் பண்டிகையின்போது “ஆசீர்வாதத்தட்டு” என்ற பெயரில் ஒரு வெள்ளித்தட்டு ஏலம் விடப்படுவதும் இப்போது வழக்கமாகிவிட்டது. இதை ஏலத்தில் எடுக்க ஏகப்பட்ட போட்டி! ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு ஏலம் எடுப்பவர்களுக்கே அந்த தட்டு கிடைக்கிறது! ஏலத்தில் எடுத்தவரைக் குறித்து ஆலயம் முழுவதும் பெருமையாகப் பேசப்படுகிறது. அந்தத் தட்டின் மூலமாக ஏலம் எடுப்பவருக்கு என்னதான் அசீர்வாதம் கிடைக்கும் என்பது நமக்குத் தெரியவில்லை.               

ஜெபம்

ஆண்டவரே, பிற மனிதரின் பார்வைக்குத் தெரியாமல் கொடுக்கும் அடக்கத்தையும் தாழ்மையையும் எனக்குக் கற்றுத் தாரும்.  ஆமென்.