காலைத் தியானம் – பிப்ரவரி 01, 2021

கலா 1: 1 – 12                                                 

இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்                       

ஆதிக் கிறிஸ்தவர்களில் அநேகர் யூதர்கள். நாளடைவில் யூதரல்லாதவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றியபோது, யூதக் கிறிஸ்தவர்கள், யூதர்களின் பழக்கவழக்கங்களையும் சட்டங்களையும் எல்லா கிறிஸ்தவர்களும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இது தவறு. இப்படி கர்த்தரிடமிருந்து வராத சட்டங்களும் பழக்கவழக்கங்களும் இன்றும் நம் திருச்சபைகளுக்குள் இருக்கின்றனவா என்று சோதித்துப் பார்க்கவேண்டும்.  இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தியுள்ள சத்தியங்கள் வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. பரலோகத்தைக் குறித்த நற்செய்தி வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேதாகமத்தை அனுதினமும் உண்மையுள்ள இருதயத்தோடு வாசித்து, தியானித்து, ஜெபிக்கும் ஒவ்வொருவருக்கும் இயேசு கிறிஸ்துவின் குரல் கேட்கும். நற்செய்தி ஒன்றுதான். அந்த நற்செய்தியை மாத்திரம் பிடித்துக் கொண்டால், சபைகளுக்குள்ளே கொள்கை வேறுபாடுகள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உன் விசுவாசம் சம்பந்தப்பட்ட காரியங்களில் குழப்பங்கள் ஏற்பட்டால் மனிதரிடம் ஓடவேண்டாம். பரிசுத்த வேதாகமத்தை நோக்கி ஒடு. ஜெபம் செய். கர்த்தருடைய சத்தத்துக்காகக் காத்திரு.  அவர் உன்னோடு பேசுவார்.              

ஜெபம்

ஆண்டவரே, குழப்பங்கள் ஏற்படும்போது உம்மண்டை வரவும், உம் சத்தத்தைக் கேட்கவும் எனக்குக் கிருபை தாரும். ஆமென்.