கலா 4: 12 – 20
சரீர பலவீனத்தோடு உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்
இன்று நாம் விரும்புவதெல்லாம் சொகுசு. வசதியானப் பிரயாணம் வேண்டும். அருமையான ஆகாரம் வேண்டும். நானும் என்னோடு வருபவர்களும் தங்குவதற்கு ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அறைகள் வேண்டும். இவைகளெல்லாம் இருந்தால் நான் வந்து சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பேன் என்று சொல்லும் மனிதர் நம் மத்தியில் அநேகர் இருக்கிறார்கள். நான் ஏழ்மையின் கோலத்தில் சுற்றித் திரியும் பிரசங்கியாக இருக்க விரும்பவில்லை; ஆகையால் எனக்கு வசதியான (ஆடம்பரமான) வாழ்க்கை வேண்டும் என்று ஆண்டவரிடம் கேட்கிற பிரசங்கிகளும் உண்டு. கர்த்தருடைய எல்லா ஊழியர்களும் ஏழ்மையின் கோலத்தில்தான் வாழவேண்டும் என்பது அவசியமில்லை. அதே சமயம் நம்முடைய எண்ணமெல்லாம் எப்படி கர்த்தர் சொல்லுகிறபடி, அவர் வழிநடத்துகிறபடி, அவர் நமக்காகத் தெரிந்துகொண்ட ஊழியத்தை நிறைவேற்றவேண்டும் என்பதில்தான் இருக்கவேண்டும். நம்முடைய வாழ்க்கையின் தேவைகளையும் வசதிகளையும் அவர் பார்த்துக் கொள்வார். இயேசு கிறிஸ்துவின் பூலோக வாழ்க்கையும், பவுல் அப்போஸ்தலனின் முன்மாதிரியும் நம் வாழ்க்கையில் பிரதிபலிக்கவேண்டும். சுவிசேஷத்தின்மேல் வாஞ்சையாயிருந்தால் துன்பங்களைக் கூட சந்தர்ப்பங்களாகக் காண்பாய்.
ஜெபம்
ஆண்டவரே, உலகப் பிரகாரமான வசதிக்குறைவுகள், நான் சுவிசேஷத்தை அறிவிக்கத் தடையாக இருந்துவிடாதபடி எனக்கு மனப்பக்குவத்தைத் தாரும். ஆமென்.