எபே 4: 11 – 21
நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்
உன் பிள்ளைகளின் சரீர வளர்ச்சிக்கு எத்தனை அக்கறை செலுத்துகிறாய்! அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவும், உடற்பயிற்சியும் அவர்கள் பெறுவதற்கு வேண்டியதையெல்லாம் செய்கிறாய் அல்லவா? அவர்களுடைய உலகப்பிரகாரமான அறிவு வளர்ச்சிக்கு, நல்ல பள்ளிக் கூடத்தைத் தேர்ந்தெடுத்து உன் வருமானத்தின் பெரும்பகுதியைச் செலவழிக்க தயாராக இருக்கிறாய் என்பதும் எல்லாருக்கும் தெரிந்ததுதானே! இவற்றைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவர்களுடைய ஆத்தும வளர்ச்சிக்கு நீ என்ன செய்கிறாய் என்பதுதான் உன்முன் வைக்கப்படும் கேள்வி. அவர்கள் கிறிஸ்துவில் வளருவதற்கு ஞாயிறு பள்ளி ஆசிரியர்களும் சபைப் போதகரும் பொறுப்பல்ல. அவர்கள் உதவி செய்வார்கள். ஆனால் பொறுப்பு உன்னுடையதுதான். அது மாத்திரமல்ல, நாம் அனைவரும் கிறிஸ்துவில் வளர்ந்துகொண்டேயிருக்க வேண்டும். நீ அனுதினமும் கிறிஸ்துவில் வளர்ந்து கொண்டேயிருக்கிறாயா? உன் ஆத்தும வளர்ச்சிக்கு, கிறிஸ்துவின் பரிபூரணம்தான் அளவுகோல் (bench mark). அந்த நிலையை அடையும்போது நாமும் பூரண மனிதராகிவிடுவோம்.
ஜெபம்
ஆண்டவரே, பரிபூரணத்தை நோக்கித் தொடர்ந்து வளர எனக்கு உதவி செய்யும். ஆமென்.