எபே 6: 10 – 18
தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் கொள்ளுங்கள்
பிசாசு தந்திரமானவன். அவனை வெற்றியோடு எதிர்கொள்ள வேண்டுமென்றால், கர்த்தர் நமக்கென்று கொடுத்துள்ள சகல பாதுகாப்புக் கவசங்களையும், ஆயுதங்களையும் நாம் எப்போதும் அணிந்திருக்கவேண்டும். பிசாசானவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமானவன். ஆகையால் சத்தியம் என்னும் கச்சை நமக்குத் தேவை. சாத்தான் நம்மைக் குற்றஞ்சாட்டுகிறவன் (வெளி 12:10). ஆகையால் நீதியென்னும் மார்க்கவசம் நமக்கு அவசியம். பகையையும், வெறுப்பையும், அமைதியின்மையையும் உருவாக்கிக் கொண்டேயிருக்கும் சாத்தானை எதிர்கொள்ள வேண்டுமானால் கிறிஸ்து ஒருவரே தரக்கூடிய சமாதானத்தைக் குடும்பங்களும் சமுதாயமும் பெறவேண்டும். அதற்கு கிறிஸ்துவின் நற்செய்தியை உலகமெங்கும் அறிவிக்கும்படி, ஆயத்தம் என்னும் பாதரட்சையை அணிந்து கொண்டிருக்கவேண்டும். சாத்தான் நம்மை நோக்கி எய்துகொண்டிருக்கும் அம்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க விசுவாசம் என்னும் கேடகம் இல்லாமல் நம்மால் வாழமுடியாது. நம்முடைய மனதையும், அறிவையும் பாதுகாத்துக் கொள்ள இரட்சிப்பு என்னும் தலைக்கவசம் மிகவும் அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக சாத்தானை வெற்றிகொள்ளவேண்டுமானால், தேவ வசனம் என்னும் ஆவியின் பட்டயம் மிக மிக முக்கியம். நீ சாத்தானைக் கண்டு பயப்படுகிறாயா அல்லது சாத்தான் உன்னைக் கண்டு பயப்படுகிறானா?
ஜெபம்
ஆண்டவரே, உம்முடைய சர்வாயுதவர்க்கத்தையும் எப்போதும் வைத்துக்கொண்டு சாத்தானை மேற்கொள்ள எனக்கு உதவிசெய்யும். ஆமென்.