காலைத் தியானம் – மார்ச் 02, 2021

எபே 6: 19 – 24                                                                                                      

எனக்காகவும் விண்ணப்பம் பண்ணுங்கள்                     

பவுல், தான் அனுபவித்த பலவிதமான துன்பங்களிலிருந்தும், தன்னைச் சுற்றியிருந்த பல ஆபத்துக்களிலிருந்தும் விடுதலை பெறும்படி ஜெபிக்கச் சொல்லவில்லை. எல்லா சூழ்நிலைகளிலும் பரலோகத்தின் நற்செய்தியை அறிவிப்பதற்குத் தேவையான தைரியத்தையும், சரியான வார்த்தைகளையும் கர்த்தர் கொடுக்கவேண்டும் என்பதே அவருடைய வேண்டுதல். நாம் ஜெபிக்காமல், எதற்கெடுத்தாலும் கர்த்தருடைய ஊழியக்காரரை நோக்கி ஓடுவது சரியல்ல. அதே சமயம் கிறிஸ்துவின் சபையில் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காக ஜெபித்துக் கொள்வது மிகவும் அவசியம். நாம் நமக்காக ஜெபிக்க இயலாத தருணங்களும் உண்டு. எதிர்பார்க்காத துன்பங்களும் துயரங்களும் திடீரென்று வரும்போது, நம் வாயிலிருந்து வார்த்தைகளே வராத சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படலாம்.  அப்படிப்பட்ட தருணங்களில் மற்றவர்களை ஜெபிக்கும்படி கேட்பது நல்லதுதான். ஊழியத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு சாத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாப்பு அதிகமாகத் தேவை. ஆகையால், கர்த்தருடைய ஊழியக்காரருக்காக, அவர்களுடைய பாதுகாப்புக்காக, குடும்பத்தினருக்காக, அவர்கள் சாத்தானின் சோதனைகளிலிருந்து தப்புவதற்காக, ஊழியத்திற்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.                    

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய ராஜிய விருத்திக்காக உழைக்கும் எல்லா ஊழியக்காரரையும் நினைக்கிறேன். அவர்களைப் பாதுகாத்து அவர்களுடைய உழைப்பை ஆசீர்வதியும். ஆமென்.