பிலி 1: 1 – 11
நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம்
கிறிஸ்தவ ஐக்கியம் எப்படி இருக்கவேண்டும் என்பதை இன்று வாசித்த பகுதியில் பார்க்கிறோம். அது வெறும் நட்பு அல்லது தோழமை அல்ல. கிறிஸ்தவ ஐக்கியத்தில், இரட்சிப்பின் அனுபவமே கிறிஸ்தவர்களை ஒன்றாகப் பிணைக்கிறது. பவுல் பிலிப்பி பட்டணத்தின் விசுவாசிகளை நினைத்தது போல, நாமும் ஒருவரையொருவர் அடிக்கடி நினைக்கவேண்டும். நினைத்தால் மாத்திரம் போதாது. நாம் நேசத்தால், அன்பினால் ஒருவருக்கொருவர் ஐக்கியப்பட்டிருக்கவேண்டும். மேலும் நாம் எப்போதும் ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட கிறிஸ்தவ ஐக்கியம் உன் திருச்சபையில் இருக்கிறதா? இருந்தால் கர்த்தரை மகிமைப் படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். இல்லையென்றால் இரட்சிப்பின் வெளிப்பாடு திருச்சபையில் இல்லை என்று அர்த்தம். இரட்சிப்பு என்பது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை: கர்த்தர் நமக்காக சிலுவையில் செய்து முடித்தது, கிறிஸ்து நம்மில் செய்து கொண்டிருப்பது (நம்மைத் தூய்மைப் படுத்தும் முறை), கிறிஸ்து நம் மூலமாக செய்துகொண்டிருப்பது (செயல்கள் அல்லது ஊழியங்கள்) என்பவையாகும். கர்த்தர் நம்மிலும், நம் மூலமாகவும் செய்ய ஆரம்பித்ததை அவரே செய்து முடிப்பார்.
ஜெபம்
ஆண்டவரே, என்னை அனுதினமும் பரிசுத்தத்தில் பக்குவப்படுத்தி வருவதற்காக நன்றி சுவாமி. ஆமென்.