காலைத் தியானம் – மார்ச் 09, 2021

பிலி 3: 1 – 11                                                                                                     

கிறிஸ்துவுக்குள் இருக்கிறவன்                                              

மோசேயின் நியாயப்பிரமாணங்கள் அனைத்தையும் கைக்கொள்ளுவது எளிதான காரியமல்ல. பவுல் சவுலாக இருந்த காலத்திலிருந்து நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன் என்று தன்னைக் குறித்து கூறுகிறார். இருந்தாலும் அதைக் குப்பையாக எண்ணுகிறார். கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படுவதையே மேன்மையாகக் கருதுகிறார்.  இன்று கிறிஸ்தவர்களில் அநேகர் உலகப் பொருட்களுக்கும் உலகக் காரியங்களுக்கும் அடிமைகளாக வாழ்கிறார்கள்.  அதன் விளைவாக கிறிஸ்தவ வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை அவர்களால் அனுபவிக்க முடிகிறதில்லை. உலகக் காரியங்கள் என்பது உலக மக்களிடம் பெறும் நற்பெயர், புகழ், படிப்பில் வெற்றி, தொழிலில் வெற்றி, வேலையில் வெற்றி போன்றவைகளாகும். இவை ஒன்றும் நமக்கு நிரந்தர மகிழ்ச்சியைக் கொடுக்காது.  கடைசியில் இவைகள் அனைத்தும் குப்பைதான். ஆலயம் செல்வதும், வேதம் வாசிப்பதும் வெளிப்படையான சடங்காச்சாரமாக மாத்திரம் இருக்குமானால் அவைகளும் குப்பைதான். ஆலயத்தில் இயேசு கிறிஸ்துவைத் தரிசிக்கிறாயா? நீ வேதம் வாசிக்கும்போது, உன் ஆண்டவர் பேசுவதைக் கேட்கிறாயா?                              

ஜெபம்

ஆண்டவரே, நான் உலகக் காரியங்களை அல்ல,  உம்முடையவனா(ளா)க இருப்பதையே விரும்புகிறேன். என்னை விட்டு விலகாமலிரும். ஆமென்.