காலைத் தியானம் – மார்ச் 10, 2021

பிலி 3: 12 – 16                                                                                                    

இலக்கை நோக்கித் தொடருகிறேன்                                                   

நேற்று வாசித்த பகுதியில் பவுல் என்ற கணக்காளன் எவையெல்லாம் குப்பை என்று எண்ணிக் கொண்டிருந்தார். இன்று வாசித்த பகுதியில் பவுல் என்னும் பந்தய வீரர் இலக்கை நோக்கித் தொடருவதைக் குறித்து எழுதுகிறார். அவர் எந்த பந்தயம் என்று குறிப்பிடவில்லை.  நான் கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறேன். கிறிஸ்தவ வாழ்க்கை 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போல ஆரம்பித்து 10 வினாடிகளில் முடிந்துவிடும் பந்தயத்தைப் போன்றது அல்ல. அது பல மணி நேரங்கள் (பல கிலோ மீட்டர்கள்) ஓடி இலக்கை அடையும் நீண்ட தூர பந்தயத்தைப் போன்றது. அப்படிப்பட்ட பந்தயங்களில் பல தடங்கல்கள் வரும். இனிமேல் முடியாது, நின்று விடலாம் என்று நினைக்கத் தோன்றும். தொடர்ந்து ஓடி இலக்கை அடைந்துவிடுவேன் என்ற தீர்மானமும் உறுதியும் உள்ளவனே பந்தயத்தை வெல்ல முடியும். பந்தயத்தின் முடிவில் கிடைக்கும் கிரீடத்தை மனக்கண் முன் நிறுத்திக் கொண்டு ஓடினால் களைப்பு தெரியாது. கிறிஸ்தவ வாழ்க்கையிலும் நாம் ஓட்டத்தின் முடிவில், உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே, நீ நன்றாக ஓடினாய் என்று சொல்லக் காத்திருக்கும் கிறிஸ்துவை மனக்கண் முன் வைத்துக் கொண்டு ஓட வேண்டும்.                              

ஜெபம்

ஆண்டவரே, நீர் எனக்கு முன் வைத்திருக்கும் இலக்கை நோக்கி, வெற்றி பெறும் விளையாட்டு வீரனின் ஒழுக்கத்துடனும், விடாமுயற்சியுடனும் தொடர்ந்து ஓட பெலன் தாரும். ஆமென்.