காலைத் தியானம் – மார்ச் 19, 2021

கொலோ 2: 1 – 7

அவருக்குள் வேர் கொண்டவர்களாயும்                            

கர்த்தரைத் தன் நம்பிக்கையாக வைக்கிற மனிதன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும் . . .  தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப் போலிருப்பான் என்று எரேமியா 17: 7, 8 வசனங்களில் பார்க்கிறோம். நீ கனிகொடுக்கிற மரமாயிருக்க வேண்டுமானால், கர்த்தருக்குள் வேர் கொண்டிருக்க வேண்டும். உன் விசுவாசம் உறுதிப்பட வேண்டுமானால் நீ அவரில் வேர் கொண்டிருக்கவேண்டும். வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் money plant என்னும் கொடியைத் தரையில் நட்டு, சுவற்றிலோ அல்லது வேலியிலோ படரவிட்டால் அது தரையில் வேறூன்றி நன்றாக வளரும். ஆனால் அக்கொடியின் இலைகள் சிறியவைகளாகத்தான் இருக்கும். அதே கொடியை உயிருள்ள ஒரு மரத்தைச் சுற்றி படரவிட்டால், மரத்திலும் வேர் கொண்டு, பெரிய இலைகளோடு   மிகுந்த செழிப்புடன் வளரும். நாமும் கிறிஸ்துவுக்குள் வேர் கொண்டிருந்தால் மாத்திரம், கிறிஸ்துவிடமிருந்து சாரத்தைப் பெற்று கனி கொடுக்கும் வாழ்க்கையை வாழ முடியும். அனுதினமும் கிறிஸ்துவிடமிருந்து சாரம் பெற்றுக் கொள்ளுகிறாயா?                                                   

ஜெபம்

ஆண்டவரே, அனுதினமும் உம்முடைய ஆகாரத்தால் என்னைப் போஷியும். ஆமென்.