காலைத் தியானம் – மார்ச் 26, 2021

கொலோ 4: 8 – 18

பிரியமுள்ள சகோதரனாகிய ஒநேசிமு            

ஒநேசிமு தன்னுடைய எஜமானாகிய பிலேமோனிடமிருந்து தப்பி ஓடிய அடிமை. அப்படிப்பட்டவனைக் கொல்லவும் எஜமானுக்கு அந்தக் காலத்தில் உரிமை இருந்தது. மேலும் ஒநேசிமு தன் எஜமானிடமிருந்து பொருளையோ அல்லது பணத்தையோ திருடிக் கொண்டு ஓடினவன். அப்படிப்பட்டவன் பவுலுக்குப் பிரியமுள்ள சகோதரனாகி விட்டான். கிறிஸ்துவில் புதிதாக்கப்பட்ட ஒநேசிமுவுடன் புது உறவு உண்டாகுகிறது. அதுதான் கிறிஸ்துவின் அன்பு மனிதருக்குள் ஏற்படுத்தக்கூடிய மாற்றம். உனக்கு கிறிஸ்துவின் திருச்சபையில் யாருடனாவது மனவருத்தம் உண்டா? பழைய குற்றங்கள் உன் மனதில் இன்னும் கசப்பை ஏற்படுத்துகிறதா? பழையவைகளை மன்னித்து, மறந்து ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொள். உன் உள்ளத்தில் வெறுப்பு இல்லாமல் இருப்பது மாத்திரம் போதாது. பிரியமுள்ள சகோதரி அல்லது சகோதரன் என்று சொல்லும் அளவுக்கு அப்படிப்பட்டவர்கள்மீது அன்பு செலுத்தவேண்டும்.                                              

ஜெபம்

ஆண்டவரே, நீர் என்னை மன்னித்து நேசிப்பதைப் போல, நாங்களும் ஒருவரையொருவர் மன்னிக்கவும் நேசிக்கவும் உதவி செய்யும். ஆமென்.