காலைத் தியானம் – ஏப்ரல் 01, 2021

மாற்கு 14: 12 – 26

யாத் 24: 4 -8        

புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது

பழைய உடன்படிக்கை, மோசேயின் மூலமாகக் கர்த்தர் இஸ்ரவேல் மக்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கை. யாத்திராகமம் 24ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் அந்த உடன்படிக்கையின் இரத்தம், பலியிடப்படும் காளையின் இரத்தம். பலியிடப்பட்ட காளையின் இரத்தம், மக்களின் பாவங்களுக்கு மரணம்தான் விளைவு என்பதை நினைவூட்டுவதற்காக சிந்தப்பட்டது. கர்த்தர் அந்த உடன்படிக்கையின் மூலம் இஸ்ரவேல் மக்களுக்கு பாவமன்னிப்பை வாக்குக் கொடுத்தார்.  இஸ்ரவேல் மக்களோ கர்த்தருக்குக் கீழ்ப்படிவோம் என்று வாக்குக் கொடுத்தார்கள். புதிய உடன்படிக்கையின் பலி இயேசு கிறிஸ்து. கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்குத் தண்டனையாக நமக்குக் கிடைக்கவேண்டிய மரணத்தைத் தம்முடைய இரத்தத்தைச் சிந்தி தாமே ஏற்றுக் கொண்டார். இன்றும் கர்த்தர் நம்மிடம் எதிர்பார்ப்பது கீழ்ப்படிதல் மாத்திரம்தான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இராப்போஜனப் பந்தியை நினைவுகூரும் இந்நாளில், உடன்படிக்கையின்படி நீ முற்றிலுமாகக் கர்த்தருக்குக் கீழ்ப்படியவேண்டும் என்பதை நினைவுபடுத்திக்கொள்.  

ஜெபம்

ஆண்டவரே, என் பாவங்களை முற்றிலுமாக மன்னித்துவிட்டதற்காக நன்றி சுவாமி. நான் எப்பொழுதும் உமக்குக் கீழ்ப்படிய உதவிசெய்யும். ஆமென்.