காலைத் தியானம் – ஏப்ரல் 05, 2021

1 தெச 2: 1 – 10     

சுவிசேஷத்தை என்னிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய்

நம் ஒவ்வொருவருக்கும் சுவிசேஷத்தை அல்லது நற்செய்தியை அறிவிக்கும்  பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நேற்றும் பார்த்தோம். நம்முடைய பணித்தளங்கள் வேறுபடலாம். சிலருக்குப் பணித்தளம் திருச்சபையாக இருக்கலாம். வேறு சிலருக்கு அது வேலை செய்யும் கம்பெனியாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு இதுவரை நற்செய்தி அறிவிக்கப்படாத பழங்குடி மக்கள் வாழும் பகுதியே பணித்தளமாக இருக்கலாம்.  உன் பணித்தளம் எது என்பதை அறிந்துகொள். நாம் நற்செய்தியை அறிவிக்கும் முறையிலும் வேறுபாடுகள் இருக்கலாம். சிலருக்கு பெரிய கூட்டங்களில் பேசி நற்செய்தியை அறிவிக்கும் வாய்ப்பு இருக்கலாம். ஆனால் நம்மில் பலருக்கு தனிப்பட்ட நபர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதே கொடுக்கப்பட்ட வாய்ப்பாக இருக்கலாம். சிலர் எழுதுவதின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கலாம். பலர் பேசுவதின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கலாம். நீ எங்கு, எப்படி நற்செய்தியை அறிவிக்கிறாய் என்பது முக்கியமல்ல. கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, பவுலைப் போல, அவரைப் பிரியப்படுத்தும்படியே அதைச் செய்கிறாயா என்பதே முக்கியம். மனிதரைப் பிரியப்படுத்த முயற்சிக்காதே.                                                        

ஜெபம்

ஆண்டவரே, நீர் என்னிடம் ஒப்புவித்துள்ள பணியை உண்மையுடனும் உத்தமத்துடனும் செய்ய எனக்கு உதவி செய்யும். ஆமென்.