ஆமோஸ் 2: 1 – 5
அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து
சாலொமோன் ராஜாவின் காலத்திற்குப் பின் இஸ்ரவேல் ராஜியம் இரண்டாகப் பிரிந்தது. யூதா கோத்திரத்தாரும் பென்னியமீன் கோத்திரத்தாரும் சாலொமோன் ராஜாவின் குமாரனாகிய ரெகோபெயாமின் ஆட்சிக்குக் கீழ் யூதா என்னும் தெற்கு நாடாகவும், மற்ற பத்து கோத்திரத்தாரும் யெரோபெயாமின் ஆட்சிக்குக் கீழ் இஸ்ரவேல் என்னும் வட நாடாகவும் பிரிந்து வாழ்ந்தனர். ஆமோஸ் தமஸ்கு, காத்சா, தீரு, ஏதோம், அம்மோன், மோவாப் ஆகிய தேசங்களுக்கு வரப்போகும் தண்டனையைக் குறித்துச் சொன்ன தீர்க்கதரிசன வார்த்தையைக் கேட்கும்போது, யூதாவின் மக்களும் இஸ்ரவேலரும் யாருக்கோ வரப்போகும் தண்டனை என்று அலட்சியமாக இருந்திருப்பார்கள். ஆனால் கர்த்தரிடத்தில் பட்சபாதமில்லை. யூதாவுக்கும் இஸ்ரவேலருக்கும்கூட தண்டனை அறிவிக்கப்பட்டது. யூதா மக்கள் கர்த்தரை அறிந்திருந்தும் அவருடைய வேதத்தைப் பின்பற்றவில்லை. அது கர்த்தருடைய வேதத்தை வெறுப்பதற்கு சமம். உன்னுடைய நிலை என்ன?
ஜெபம்
ஆண்டவரே, உம்முடைய வேதத்தின் மேல் பிரியமாயிருந்து உம்முடைய கட்டளைகளை என்றும் பின்பற்றும் கிருபையை எனக்குத் தாரும். ஆமென்.