காலைத் தியானம் – ஏப்ரல் 18, 2021

ஆமோஸ் 3: 7 – 15               

தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்         

நாம் விதைப்பதற்குத்தக்க பலனையே அறுப்போம் என்று வேதம் முழுவதும் பார்க்கிறோம். கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில் நடந்தால், ஜீவ கிரீடத்தையும் நித்திய வாழ்வையும் அறுப்போம். தீய செயல்களையும் பாவ வாழ்கையையும் விதைத்தால் அழிவை அறுப்போம். நாம் இப்பூமியில் மரித்து, நம் ஆண்டவரின் முன் நிற்கும் நாள் முதலில் வரலாம். அல்லது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை முதலில் வரலாம். நாம் ஆண்டவருக்கு முன் நிற்கும் அந்நாளில் “ஆண்டவரே எனக்கு அது தெரியாது” என்று மட்டும் நம்மால் சொல்லமுடியாது. அது மாத்திரமல்ல, நாம் தெரிந்தும், துணிந்து பாவ செயலில் ஈடுபட்டால், அதற்குரிய விளைவுகளை நாம் அல்லது நம் சந்ததியார் இவ்வுலகிலேயே எதிர்கொள்ளவேண்டியதிருக்கும் என்பதையும் வேதத்தில் பார்க்கிறோம். இதில் ஒன்றாகிலும் இரகசியமல்ல. ஆண்டவருடைய எச்சரிப்புகூட அவர் நமக்குக் கொடுத்திருக்கும் கிருபையே.

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய எச்சரிப்புகளுக்காக நன்றி சுவாமி. ஆமென்.