காலைத் தியானம் – ஏப்ரல் 21, 2021

ஆமோஸ் 5: 1 – 6               

கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்         

அழிவிலிருந்து மீண்டுவர ஒரே வழிதான் உண்டு. கர்த்தரிடத்திற்குத் திரும்ப வேண்டும். பெத்தேலையும் தேட வேண்டாம், கில்காலிலும் சேரவேண்டாம் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஒரு நிமிடம் கவனியுங்கள். கர்த்தர் என்ன சொல்லுகிறார்? பெத்தேல், கில்கால் போன்ற இடங்களின் முக்கியத்துவத்தை சில தினங்களுக்கு முன் தானே தியானித்தோம்! அந்த இடங்களுக்கு சரித்திரப் புகழ் இருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமற்றவை. அற்புதங்களைத் தேடி வேளாங்கன்னிக்குப் போகிறவர்கள் நம் நாட்டில் அநேகர் உண்டு. அற்புதங்களைச் செய்கிறவர், செய்ய வல்லவர், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து; வேளாங்கன்னி அல்ல. சமீப காலங்களில், ஆசீர்வாதம் கிடைக்கும்படி இஸ்ரவேல் நாட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லி அப்பயணத்தை வியாபாரமாக்கும் தொழில் பெருகிக்கொண்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக வாழ்ந்த நாட்களில் நடந்து சென்ற ஊர்களைப் போய் பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் எதற்காகப் போகிறாய் என்பதில் கவனமாயிரு.

ஜெபம்

ஆண்டவரே, உமக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை வேறே எந்த ஒரு இடத்துக்கும், பொருளுக்கும், மனிதனுக்கும் கொடுத்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.