யோபு 34: 1 – 4
ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்
யோபுவின் சரித்திரத்தைத் தொடர்ந்து தியானிப்போம். யோபு 33:33ல் எலிகூ யோபுவை நோக்கி, நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்று சொன்னான். இப்போது, யோபுவையும் அவனுடைய நண்பர்களையும் பார்த்து, ஞானிகளே என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள் என்று சொல்லுகிறான். அதாவது ஞானிகளுக்கு ஞானத்தை உபதேசிக்கும் நிலைக்கும், அறிவாளிகளுக்கு அறிவைப் போதிக்கும் நிலைக்கும் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளுகிறான். பிறருக்கு உபதேசிப்பது எளிது. ஞானத்தைப் போதிப்பது எளிது. ஞானமாய் நடந்துகொள்வது கடினம். நம்மைச் சுற்றியிருக்கும் மனிதரைப் பார்த்து இப்படி அறிவில்லாமல் நடந்துகொள்கிறார்களே என்று நாம் நினைக்கும் தருணங்கள் உண்டல்லவா? அதற்கு, “நான் உன்னை விட, அல்லது உங்களைவிட அறிவில் சிறந்தவன்” என்று நம்மை நாமே போற்றிக் கொள்ளுகிறோம் என்பதுதான் அர்த்தம். நம்முடைய அனுபவமும் ஞானமும் நம்மை ஒரு உயர்ந்த இடத்தில் வைத்துவிட்டது என்று அடிக்கடி நினைத்துவிடுகிறோம். உன் போதனைகளையும் ஞானத்தையும் உன்னிடம் கேட்காதவர்களிடத்தில் அவற்றைக் கொடுக்க முயற்சிக்காதே.
ஜெபம்
ஆண்டவரே, நான் ஞானி என்று நினைக்கும் அகங்காரத்தை என் மனதிலிருந்து எடுத்துப் போடும். ஆமென்.