காலைத் தியானம் – மே 02, 2021

யோபு 34: 5 – 9                 

நியாயம் என்னிடத்தில் இருந்தும் . . .                

நான் எல்லாருக்கும் நல்லதை மாத்திரம் தானே செய்து வருகின்றேன்!  பின் ஏன் எனக்கு இத்தனை துன்பங்கள்?  நான் உண்மையைத் தவிர வேறே எதையும் பேசியதில்லையே! பின் ஏன் எனக்கு இந்த கெட்ட பெயர்? நான் எவ்வளவு நேர்மையாக வாழ்ந்து வருகிறேன்! பின் ஏன் கடவுள் எனக்கு இப்படிப்பட்ட தண்டனையைக் கொடுக்கிறார்? இவையெல்லாம் நாம் சொல்லவில்லையென்றாலும் இவ்வுலகில் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் தானே! இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் பேசினால், கர்த்தர் நீதியும் நியாயமும் இல்லாதவர் என்று சொல்வதற்கு சமம். இன்று வாசித்த பகுதியில், எலிகூ யோபுவின் மீது இரண்டு குற்றச்சாட்டுகளை வைக்கிறார். தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டபடியால்தான் குற்றமற்ற நான் இவ்விதமான கொடூரமான தண்டனைகளை அனுபவிக்கிறேன் என்று யோபு சொன்னான் என்பது முதல் குற்றச்சாட்டு. இரண்டாவதாக, தேவன்மேல் பிரியம் வைக்கிறதினால் மனிதனுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று யோபு சொன்னதாக எலிகூ சொல்லுகிறார். இரண்டாவதாக சொல்லப்பட்ட வார்த்தைகளை அந்த விதமாக யோபு சொல்லவில்லை என்றாலும், எலிகூ அவ்விதமாகப் புரிந்து கொண்டிருக்கலாம். அது எப்படியிருந்தாலும், நாம் துன்பங்களை அனுபவிக்கும் நேரங்களில் நம் இருதயத்தின் எண்ணங்களையும் வாயின் வார்த்தைகளையும் குறித்து அதிகக் கவனமாக இருக்க வேண்டும்.

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய நீதியையும் நியாயத்தையும் குறித்து ஒருபோதும் தவறாகப் பேசிவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.