காலைத் தியானம் – மே 06, 2021

யோபு 34: 31 – 37                 

நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன்               

யோபு அனுபவித்த துன்பங்கள் அவன் செய்த பாவங்களுக்குக் கிடைத்த தண்டனை அல்ல என்பது நமக்குத் தெரியும்.  ஆனால் அந்த துன்பங்களில் மத்தியில்  அவன் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன. அதில் தவறில்லை. ஆனால் அவன், கர்த்தர் எனக்கு நியாயத்தைச் செய்யவில்லை என்று சொன்னது தவறு. கர்த்தர் மீது குற்றம் சொல்லுவது பாவம். நாமும் தெரியாமலேயே அப்படிப்பட்ட பாவங்களைச் செய்திருக்கக் கூடும் அல்லவா? ஆகையால்தான் அறிந்தும் அறியாமலும் செய்கிற பாவங்களுக்காக நாம் ஆண்டவரிடம் அனுதினமும் மன்னிப்பு கேட்க வேண்டும். அறியாமல் செய்கிற பாவங்களைச் செய்யாமலிருக்க வழியே இல்லையா? இருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு நமக்குள்ள நெருக்கம் அதிகரித்துக் கொண்டே போகும்போது, நமக்கு அவருடைய எண்ணங்களும், விருப்பங்களும், குணாதிசயங்களும், வல்லமையும் அதிகமாய்த் தெரிய வரும். அப்போது நாம் அவருக்கு விரோதமான பாவங்களைத் தெரியாமலும் செய்யமாட்டோம்.  அனுதினமும் அவரோடு நீ வைத்திருக்கும் நெருக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறதா?

ஜெபம்

ஆண்டவரே, அறியாமையால் கூட உமக்கு விரோதமாகப் பாவம் செய்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.