காலைத் தியானம் – மே 14, 2021

யோபு 38: 1 – 41                

நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு                 

எனக்கு பரிசுத்த வேதாகமத்தில் மிகவும் பிடித்த பகுதிகளில் யோபு 38 முதல் 42 வரையுள்ள அதிகாரங்களுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. சர்வ வல்லவரான கர்த்தருக்குமுன் மனிதன் யார் என்பதை மனிதனுக்கு உணர்த்த இதைவிட சிறந்த வேத பகுதி ஒன்று இருக்க முடியாது. யோபு கர்த்தரை நோக்கி அநேகக் கேள்விகளைக் கேட்டான்.  கர்த்தரோ கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், யோபுவைப் பார்த்து எழுபத்தேழு கேள்விகளைக் கேட்கிறார். அதில் ஒரு கேள்விக்குக் கூட யோபோ அல்லது வேறே எந்த ஒரு மனிதனோ பதில் சொல்ல முடியாதல்லவா? 38ம் அதிகாரத்தின் மையக் கருத்து, ”உனக்கு என் படைப்பை விவரிக்க முடியுமா?” என்பதே. Can you explain My creation?  கர்த்தர் யோபினுடைய உண்மையையும் உத்தமத்தையும் குறித்து கேள்வி கேட்கவில்லை. யோபுவுக்குக் கர்த்தருடைய வழிகளை அறிந்துகொள்ளும் ஞானம் உண்டா என்று கேட்கிறார்?  யோபு கர்த்தரை அவனுக்கு நன்றாகத் தெரியும் என்று நினைத்தான். இப்போது அவனுக்குக் கர்த்தரைப் பற்றி எவ்வளவு தெரியாது என்பதை அறிந்துகொண்டான்.

ஜெபம்

ஆண்டவரே, உமது வல்லமைக்கு முன் நான் எம்மாத்திரம்? பெருமை என்னை ஆட்கொள்ளாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.