காலைத் தியானம் – மே 16, 2021

யோபு 40: 1 – 5                

என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்                

சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்க விரும்பிய யோபுவுக்கு இப்போது ஒரு தருணம் கொடுக்கப்படுகிறது. யோபு என்ன சொல்ல முடியும்? ஆண்டவரே, நான் நீசன்; நான் வாயைப் பொத்திக் கொண்டு பேசாமல் இருப்பேன் என்று சொல்லுகிறான். வேதத்தில் நமக்குப் புரியாதவை, இவ்வுலகில் நடக்கும் அநியாயங்கள் போன்றவைகள், ஆண்டவரிடம் இதைப் பற்றி கேட்கவேண்டும் என்ற எண்ணத்தை நமது மனதில் உண்டாக்கும் தருணங்கள் உண்டல்லவா?  நான் பரலோகத்துக்குப் போனவுடன் ஆண்டவரிடம் இதைக் கேட்பேன், அதைக் கேட்பேன் என்று சொல்லுகிறவர்கள் அனைவருக்கும் யோபு படித்துக் கொடுக்கும் பாடம் இதுதான். சர்வவல்லவருக்கு முன் ஒரு கேள்வியும் நம் மனதிற்கு வராது! இவ்வுலகிலும் கர்த்தருக்கு முன்பாக நாம் வழக்காடிக் கொண்டிருக்கும் வரை கர்த்தர் நம்மை உபயோகிக்கமுடியாது. என்று நம்மை நாமே தாழ்த்தக் கற்றுக் கொள்ளுகிறோமோ அன்றுதான் குயவன் கையில் இருக்கும் களிமண் போல நாமும் ஆண்டவருக்கு உபயோகமாக இருப்போம்.

ஜெபம்

ஆண்டவரே, நீர் காட்டும் பாதை, கரடுமுரடாக இருந்தாலும் கேள்வி கேட்காமல் அதில் நடப்பேன். நீரே என்னை உபயோகியும். ஆமென்.