காலைத் தியானம் – மே 20, 2021

ஒபதியா 5 – 8 

உன்னோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும்            

யாக்கோபின் சந்ததியார் இஸ்ரவேல் மக்கள். யாக்கோபின் சகோதரனான ஏசாவின் சந்ததியார் ஏதோமியர். ஏசா யாக்கோபில் ஆரம்பித்த சண்டை இரு சந்ததியாரிடமும் தொடர்ந்தது. இஸ்ரவேலர் ஒடுக்கப்பட்டபோது ஏதோமியர் கவலைப்படாமல் மெத்தனமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர். ஏதோமியர் செய்த பல குற்றங்களை நாம் ஒபதியா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் பார்க்கிறோம். இந்த புத்தகம் இஸ்ரவேலர் பெலிஸ்தரால் ஒடுக்கப்பட்ட கால கட்டத்தில் (கி.மு. 853-841) எழுதப்பட்டது என்று சில வேத ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். வேறு சிலரோ, இது இஸ்ரவேலர் பாபிலோனியரால் சிறைப் பிடிக்கப்பட்ட கால கட்டத்தில் (கி.மு. 605 – 586) எழுதப்பட்டது என்று சொல்லுகிறார்கள். ஏதோமியர் தங்களுடைய வெற்றிகளில் மிதந்து ஆண்டவரைக் குறித்து அலட்சியமாக இருந்ததை நேற்று பார்த்தோம். மனிதருன் செய்துகொண்ட உடன்படிக்கையை நம்பி பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த ஏதோமியரை இன்று பார்க்கிறோம். நாம் அதிகமாக நம்பி, நேசித்து, யார் மீது பாசத்தைக் கொட்டுகிறோமோ, அவர்களே நம்மைக் கைவிடும் அனுபவம் நம்மில் சிலருக்கு உண்டல்லவா? நிலையில்லா உறவை நம்பி உன் ஆண்டவரின் உறவு தேவையில்லை என்று நினைத்துவிடாதே.

ஜெபம்

ஆண்டவரே, என் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் உமக்கே முதன்மையான இடத்தைக் கொடுக்கும் ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.